பொதிந்திருக்கும் பவளங்கள் - I

TALES FROM THE LOOP

புசுபுசுவென்று ஒரு பூனைக்குட்டி ஆழமாய் ஒரு தூக்கம் போட்டு, நீட்டி நிமிர்ந்து சோம்பல் முறித்து, பாலுக்காக நம் காலைச் சுற்றி, அதைக் கொடுக்கும் வரை நம்மை வேறு வேலை செய்ய விடாது, கொடுத்த பின்னும் நம் கவனம் நாடி, சோபாவில் அமர்வது போதாதென்று, நம் மடியில் வந்து சுருண்டு கொண்டு கதகதவென்ற ஒரு பஞ்சுப் பந்தாவது போல் தான் அமேசான் ப்ரைமின் “TALES FROM THE LOOP” தொடர். மெல்லிய ஒரு அழகுடன், ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றி ஆரம்பிக்கும் இந்தத் தொடர், முடிவில் நினைவுகள் மறுபடி மறுபடித் தேடும் வெதுவெதுப்பானப் பூனைப் பொதியாகிறது.

நாவல்களிலிருந்து, சிறுகதைகளிலிருந்து, டைரிக் குறிப்புகளிலிருந்து, ஏன், கவிதைகளிலிருந்தும் கூடத் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் எழுதப்படுவதும் படமாக்கப்படுவதும் வழக்கமான ஒன்று தான். ஆனால் ஓவியங்களிலிருந்து ஒரு தொலைக்காட்சித் தொடர், கற்பனையில் புனையப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுவது
“TALES FROM THE LOOP”ல் தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் மெர்சர் என்ற ஊரில் "லூப்" என்று செல்லமாக அழைக்கப்படும் "Mercer Center for Experimental Physics" ஆய்வகம் நிலத்தின் அடியில் இருக்க, அந்த ஆய்வகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மெர்சரில் வசிக்கிறார்கள். ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளால் அந்த ஊரின் பரப்பெங்கும் விசித்திரமானப் பொருட்களும், ரோபாட்டுகளும், இயந்திரங்களும் விரவிக் கிடக்கின்றன. விளக்கமில்லா நிகழ்வுகள் சிலவனவும் அரங்கேறுகின்றன.

தொடரின் எட்டு அத்தியாயங்களிலும் ஏதோ ஒருவருக்கு அந்த விசித்திரமானப் பொருட்களால் நிகழும் விளக்கமில்லா நிகழ்வுகளும் அவை அந்த ஊரின் மனிதர்களிடத்து ஏற்படுத்தும் தாக்கங்களுமே கதைகள்.

Science fiction வகைத் தொடர் என்று பொதுவாக வகைப்படுத்தினாலும் 'Tales From The Loop' வழக்கமான science fiction தொடர்களுக்கான எந்த இலக்கணமும் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய ஆச்சர்யம். பாதி இருட்டை நம்பி இருக்கும் காட்சிகள், சடசடவென்று வெட்டி ஒட்டும் எடிட்டிங், மூன்று நாள் உட்கார்ந்து யோசித்தாலும் கதை என்ன, எங்கே செல்கிறது என்று புரியாத குழப்பம், வலுக்கட்டாயமாக வலிந்து இழுத்துப் போடப்பட்ட முடிச்சுகள், நடுவே 'ரொமான்டிக் ஆங்கிள்'க்காக திணிக்கப்பட்ட காதல், இறுதியில் அனைத்திற்கும் 'இதுதானா மறுபடியும்?' என்று நினைக்க வைக்கும் முடிவுகள் என இவை எவையும் இல்லாமல் இருக்கும் இந்தத் தொடரை science fiction எனப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதைப் பற்றிச் சிறிதும் சலனமில்லாமல், அதீத அமைதியுடனும், தீர்க்கமானப் பார்வையுடனும், அந்தப் பார்வையின் மீது அசைக்க முடியா நம்பிக்கையுடனும் எடுக்கப்பட்டுள்ளத் தொடர்.  

Simon Stålenhag என்ற சுவீடன் நாட்டு ஓவியரின் ‘Tales From The Loop’ என்ற ஓவியப் புத்தகத்தின் ஓவியங்களைப் பார்த்த மாத்திரத்தில் அவற்றால் கிட்டத்தட்ட வசியமாக்கப்பட்டு, அவற்றுக்குரித்தானக் கதைகளை ஒரே வாரத்தில் தயார் செய்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் தொடரின் க்ரியேட்டரான Nathaniel Halpern.

அதன் பாதிப்பு காட்சியமைப்பின் ஒவ்வொரு ப்ரேமிலும் எதிரொலிக்கிறது. Simon Stålenhag ன் ஓவியங்களுக்குள் பயணிப்பது போல் இருப்பதை விட அந்த ஓவியப்பரப்பின் ஒரு அங்கமாகவே பார்வையாளர்களை உள்ளிழுத்து விடுகின்றன முதல் அத்தியாயத்தின் ஆரம்ப நொடிகள்.

பரந்து விரிந்த நிலப்பரப்பு, இயற்கையான ஒளிப்பதிவு, ஒரு அமெரிக்க சிற்றூரின் அன்றாட வாழ்க்கை(!), குரலைக் கூட உயர்த்தாத வசனங்கள், நிகழ்வுகளுக்குப் பொருந்தாத சப்தங்கள் இம்மியும் இல்லாமல், அளவாய் சலசலத்தோடும் ஓடை போல் ஆர்ப்பாட்டமில்லாத கதை நகர்வு என்று 'Tales From The Loop'ன் ஓவியங்களுக்கு எந்தவிதக் குறையுமின்றி நிறை செய்திருக்கிறார் இதன் கிரியேட்டர் Nathaniel Halpern.

இவரின் பார்வையில் நம்பிக்கை வைத்து எந்தவித சமரசத்திற்கும் அவரை ஆட்படுத்தாமல் இந்தத் தொடரை உருவாக்கி வெளியிட்ட அமேசானுக்கும் பாராட்டுக்கள் செல்லத்தான் வேண்டும்.

உங்களிடம் இருப்பதிலேயே மிகப்பெரியத் திரையில் (வயர்லெஸ் ஹெட்போன்கள் இருந்தால் இன்னும் நலம்) தனியே அமர்ந்து ஒவ்வொரு அத்தியாயமாகப் பார்த்தால் உணரலாம் இந்தத் தொடரின் முழுமையான ஆழமும் வீச்சும்.  சில வேளைகளில் பூனைக்குட்டியின் கதகதப்பை பங்குபோட மனம் விரும்புவதில்லை.

Series   -           Tales From The Loop

Platform   -      Amazon Prime Video

                       

 

எழுத்துக்கள் போதும். எழுதியவர் எதற்கு?