சிறுகதை

தாழ் இல்லா அறைகள்


இரவு உணவிற்கு சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த நினைவு வந்தது. உருட்டிக்கொண்டிருந்த கைகள் ஒரு கணம் தடுமாறி பின்னர் அனிச்சையாய் தம் செயல் தொடர்ந்தன. இத்தனை வருடங்களாக - எத்தனை வருடங்கள்? கணக்கிட்டுப் பார்த்தால் பதினேழு வந்தது - இத்தனை வருடங்களாக வராத நினைவு, இப்போது இந்தக் கணம் ஏன்? இந்த நினைவின் இருப்பு இந்தக் கணம் வரை அறியாமல் போனது ஏன்? மனதின் எத்தனையாவது படிமத்தில் புதைந்து கிடந்தது இது? இந்தக் கணத்தின் எந்தச் சாவி இந்த ரகசிய அறையைத்  திறந்தது? அந்தச் சாவியைக் கண்டெடுத்தால் மீண்டும் அறையைப் பூட்ட முடியுமோ? பூட்டுக்கள் இல்லாத திறவுகோல்கள் கொண்ட விசித்திர அறைகளைத் தாழிடுவது எங்ஙனம்?

“சப்பாத்திக்கு இன்னைக்கு என்னம்மா குருமா?”

பத்து வயது மகனின் கேள்விக்கு, “ராஜ்மா”, என்ற ஒற்றை வார்த்தை பதில் கணவருக்கு வித்தியாசமாய்ப் பட்டிருக்கவேண்டும்…

சமையலறையில் கை கழுவும் சாக்கில் என்னிடம், “என்னம்மா, உடம்பு சரியில்லையா?” என்று கேட்ட கேள்விக்கு, “தலைவலி”, என்ற ஒற்றை சொல்லே மீண்டும் பதிலாய் வந்தது.

“நீ போய்த் தூங்கு. நான் பார்த்துக்கறேன்”, என்ற கணவரின் கரிசனத்தை -

“இல்லை. நானே பார்த்துக்கறேன். நீங்க போங்க”, என்று அவசரமாய் மறுக்கத் தோன்றியது.

சமையலறையின் பழக்கப்பட்ட அரவணைப்பும், எண்ணங்களின் பங்களிப்பின்றி வேலை முடிக்கும் கைகளும், இரவு நேரத்தின் ஏகாந்தமும் அந்த நினைவின் முடிச்சவிழ்க்கும் முயற்சியாயின.

பதினேழு வருடங்கள் தானா? மீண்டும் கணக்கிட்டுப் பார்க்கையில் அது சரியாகவே இருந்தது. கல்லூரியின் இரண்டாம் ஆண்டு. நான்காவது செமஸ்டர் தேர்வறை. தேர்வு எண் பார்த்து இருக்கையில் அமர்ந்தவளுக்கு அருகில் இருப்பவனின் முகம் பார்க்கக்கூட சந்தர்ப்பமில்லை. வினாத்தாளை வாங்கிப் படித்து கேள்விகளைத் தேர்ந்தெடுத்து விடைகளை மனதில் சுழலவிட்டு சரிபார்த்து பேனா எடுத்து எழுத ஆரம்பித்த ஒரு மணி நேரம் வரை தலை உயரவில்லை. அருகில் இருப்பவனின் தேர்வறைக்குப் பொருந்தாத ஏதோ ஒரு செய்கை ஓரப்பார்வையில் விழுந்து மூளையில் பதிந்து தலை திருப்பிப் பார்ப்பதற்குள் கட்டுக்குள்ளிருந்து சிதறிவிட்டது அந்தக் கணம்.

விடைத்தாளில் தெறித்து விழுந்த இரத்தத் துளிகள் சிறுபிள்ளைத்தனமாய் பென்சில் சீவி கையறுத்து விழுந்தவை அல்ல – அவைகளின் பிறப்பிடம் அவன் நாசித்துவாரம் என்று தலைக்குள்ளிருந்த சாம்பல் நிற செல்களுக்கு எட்டுவதற்குள் சொட்டிக்கொண்டிருந்த இரத்தம் கொட்டத்தொடங்கியது. செய்வதறியாது எழுந்து நின்றவனின் கோலம் கண்டு மேலாளர் பதறியடித்து ஓடி வந்து அவன் தலையை உயரே தூக்கும்படி சொல்லி அவன் கைப்பிடித்து அழைத்துப்போன போதும் விபரீதமாய் எதுவும் தோன்றவில்லை. பதினைந்து நிமிடங்கள் கழித்து மேலாளர் திரும்பி வந்து அவன் விடைத்தாளை அப்புறப்படுத்திய போதும் தேர்வறையில் அவரவர் அவரவர் தலைகளுக்குள் ஏற்றியிருந்த பாடங்களை வெள்ளைத்தாளின் கறுப்பு வார்த்தைகளாய் மாற்றுவதில் கவனமாய் இருந்தனர்.

மூன்றாம் நாள் தேர்வின் தொடக்கத்தில் கல்லூரியின் ஒலிபெருக்கியில் முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க இரத்த புற்றுநோயால் பிரிந்துவிட்ட மாணாக்கன் ஒருவனின் ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியபோது தான் காலியாய் இருந்த பக்கத்து இருக்கை வெற்றிடத்தின் அர்த்தம் உறைத்தது. தேர்வுகள் முடிந்த கல்லூரியின் பேச்சும் மூச்சும் அரை நாளாய் அவனைப்பற்றியே இருந்த போது மௌனத்தைத் தவிர வேறு பங்களிப்பு செய்ய இயலாமல் போனது ஏன் என்ற வினாவின் விடைதான், அந்த விடையின் புரிதல் தான் இந்த நினைவின் திறவுகோலா?

இந்த விடை கிடைக்காமலே இருந்திருந்தால் அந்த அறை பூட்டியே இருந்திருக்குமோ? விடையை மறுபடி வினாவிற்குள் திணித்துவிட்டால் இந்தக் கதவு திரும்பவும் இறுகிக்கொள்ளுமோ? விடையை வினாவிற்குள் கரைத்தல் சாத்தியப்பட்டாலும் கூட புரிதலை எப்படிப் புரிதலல்லாமல் ஆக்குவது?

இந்தக் கணத்தில் இந்நினைவின் வருகைக்கு அர்த்தம் தான் என்ன? அர்த்தம் எதற்கு என்றாலும் அறையின் திறப்பிற்கு நோக்கமென்ன? காரணங்களின்றி காரியங்களில்லை. இந்தக் காரியத்தின் காரணமென்ன? எத்திசையிலேனும் நான் எட்டெடுத்து வைக்கவேண்டுமா? அல்லது எவ்வகையிலேனும் நான் நியாயங்கள் தேட வேண்டுமா? என் அந்த க்ஷண நேர செய்கைக்கு… இல்லை, அது செய்கை இல்லை - செய்கையின்மை. வேறு என்னவென்று அழைப்பது அதை? என் அந்த க்ஷண நேர செய்கையின்மைக்கு நான் பிராயச்சித்தங்கள் தேட வேண்டுமா?

அப்படித்தான் இருக்க வேண்டும். இந்தப் பூட்டு தான் அந்தத் திறவுகோலுக்குப் பொருந்துகிறது. இது தான் சரியான பூட்டாய் இருக்கவேண்டும்.

எங்ஙனம் தேடுவது பிராயச்சித்தங்களை? எத்தனை வேண்டும்? எப்படித் தெரியும் எனக்கு அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனவென்று? யாரிடம் கேட்பது? கேட்கக்கூடியவையா இவை? பகிர்தலுக்கானவையா இவை? பிரத்யேகமானவையல்லவா இவை? அப்படியெனில் என்ன செய்வது நான்? இவைகளுக்கான சாவிகள் கிடைக்கும்வரை காத்திருப்பதா?

அதுதான் சாத்தியமெனில் அதைத்தான் செய்யவேண்டும்.

ஒவ்வொரு முறை சப்பாத்திக்கு மாவு உருட்டும் போதும் அந்த அறைகள் திறந்துகொண்டன. இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு? ஏதோ உள்ளதென்று நினைத்து சப்பாத்தியே செய்யாமல் விட்டேன். நினைவு இழை சப்பாத்தியிலிருந்து கோதுமை மாவிற்குத் தன் இணைப்பை மாற்றி, சில தினங்களில் சமையலறையிலேயே ஒட்டிக்கொண்டது.

பெரிய இடைஞ்சல் இதனால் இல்லையெனினும் நினைவின் இழை வாழ்வில் ஒரு இருப்பாகியது. என் எண்ணங்கள் செய்கைகள் அனைத்தையும் மௌனமாய் இரு கண்கள் கொண்டு பின் தொடர்ந்தது. குற்றம் சாட்டுதல் அப்பார்வையின் அர்த்தமென நானாய்க் கற்பிதம் செய்து கொண்டேன்.

எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள் இந்த மௌன மன்றம் நடைபெற்றதென்ற கணக்குகள் என் வசம் இழந்த ஏதோ ஒரு கணத்தில் சட்டென விரிந்தது பிறிதொரு அறையின் கதவு.

“உன்னைய ஹாஸ்பிடல்ல பார்த்ததா என் கலீக் சொன்னாரு. என்னம்மா உடம்புக்கு? என்கிட்ட சொல்லியிருந்தா நானே கூட்டிட்டுப் போயிருப்பேன்ல?” என்ற கணவருக்கு…

“உடம்புக்கு ஒண்ணும் இல்ல. பிளட் டொனேட் பண்ண போயிருந்தேன்”, என்றேன்.

“பிளட் டொனேட் பண்ணவா? என்ன திடீர்னு?” என்று கேட்டவருக்கு…

“சும்மா...தோணிச்சு”, என்றேன், மேலும் விவரிக்க விருப்பமில்லா தொனியில்.

ஆழ்ந்து அமைதியான பார்வை பார்த்தவர், “ஆர் யூ ஓகே நௌ?” என்றார்.

வார்த்தைகளின் உள்ளிருந்த அர்த்தம் உணர்த்திய புரிதல் இமைகளுக்குள் இரு துளியாயின.

மௌனமாய் தலையாட்டினேன் அன்றிரவு சப்பாத்தி செய்யலாமா என்ற யோசனையுடன்.



Write a comment ...