சிறுபிள்ளைக் கையில் பொம்மை


வானம் அதுவாகத்தான் இருக்கிறது.

மரங்கள், செடிகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், நீர், நிலம், காற்று, பூமி, உலகம், அண்டசராசரம்...

அனைத்தும் அவைகளாகவேத்தான் இருக்கின்றன.

பெயர் கொண்டு குறிப்பு வைத்துப் பார்ப்பது மனிதக்கண்கள் மட்டுமேயோ?

நீரிடம் 'நீ குளம்' என்றேன். சுழித்து வழுக்கி வழிந்துப் பாய்ந்தது.

காற்றிடம் 'நீ தென்றல்' என்றேன். சூறாவளியாய் சுழன்றடித்து ஊர் கலைத்துப் போனது.

பறவையிடம் 'நீ புறா' என்றேன். அந்தரத்தில் பல்டியடித்து ‘Jonathan Livingston புறா’ ஆனது.

நிலவிடம் 'நீ வெண்ணிலா' என்றேன். மறுநாள் செக்கச் சிவப்பாய் உதித்தது.

சூரியனிடம் 'நீ சுடுவாய்' என்றேன். நண்பகலில் உறையும் பனியில் உடல் விறைத்தது.

கண்கள் -

மனம் -

அறிவு -

எதைக் கொண்டு அறிவது இவை அனைத்தையும்?

எதைக் கொண்டுக் காணினும் முழுதாய் அறிய முடியுமா அதை? எதையும்?

அறிபவை அனைத்தும்...

கண்களின் வழி -

புலன்களின் வழி -

சொற்களின் வழி -

மொழிகளின் வழி -

அறிவின் வழி -

தோற்றுவிக்கப்பட்ட பிம்பங்களைத் தானோ?

அறிந்ததைக் கொண்டு அறியாததை அறிய முயலும் முயற்சி மட்டுமோ அத்தனையும்?

அறிந்ததைக் கொண்டு மட்டும் அறிய முடியுமோ அறியாத அத்தனையும்?

அறிந்ததைக் கொண்டு அறிந்தது சொற்பம் என்று மட்டுமே அறிய முடியுமோ இல்லையேல்?

அறிந்த சொற்பத்தைக் கொண்டு அறிய முடியா அகண்டத்தை அளக்க முயலும் முயற்சியை என்னவென்பது?

அறிந்ததைக் கொண்டு அறிய முடியாததை அறிய முடியாது என்று அறியும் வரை -

அண்டமும் அதன் மொத்தமும் -

சிறுபிள்ளைக் கையில் பொம்மைதானோ?

Write a comment ...